தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 17 November 2015

வார ஓய்வும்.. வரலாற்று உண்மைகளும்..

உலகம் ஒரு சேர விழித்ததில்லை...
உலகம் ஒரு சேர உறங்கியதில்லை...
ஓயாத உலகில்...
ஓய்வின்றி  நடக்கும் ஒரே நிகழ்வு
ஓய்வு ஒன்றுதான்...

மதம் ஓய்வை  விதியாக்கியுள்ளது...
மனிதம் ஓய்வை உரிமையாக்கியுள்ளது...

அந்தோ... BSNLலில் மட்டும்..
உழைக்கும் தொழிலாளிக்கு ஓய்வளிப்பதில்
விதி விளையாடுகிறது...
சட்ட விதி சதிராடுகிறது...
கெட்ட சதி தலைவிரித்தாடுகிறது...

நினைவலைகள்...
இராமேஸ்வரம்  கடலலைகளை நோக்கிப் பயணிக்கிறது...
வெள்ளையர்களிடமிருந்து விடிவு பிறந்த காலம்..
ஆனாலும் கொள்ளையர்களிடமிருந்து...ஏது விடிவு காலம்?

அன்று...
இராமநாதபுரம் பகுதியில்..
தரை மேல் பிறந்து தண்ணீரில் பிழைத்த மீனவர்கள்
நாள் முழுக்க.. வாரம் முழுக்க.. மாதம் முழுக்க..
நடுக்கடலில் மீன் பிடித்து தண்ணீரில் மிதந்தார்கள்..
ஓய்வு என்பதே இல்லாமல் கண்ணீரில் மிதந்தார்கள்...

அன்று.. அவர்கள் கரம் உயர்த்தி
குத்தகைக்காரர்களிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்கள் ஞாயிறு சர்ச்சுக்கு செல்ல வேண்டும்...
முஸ்லிம்கள் வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு செல்ல வேண்டும்..
இந்துக்கள் செவ்வாயன்று தங்கள் குலசாமிகளைக் கும்பிட வேண்டும்...
எனவே.. குத்தகைக்காரனே..
எங்களுக்கு வார ஓய்வு கொடு...

கேட்டவர்கள் மீனவர்கள்...
கேட்க வைத்தது.. யார்?
நம் மீனவர் சங்கம்...
இந்தியப் பொதுவுடைமைக்கட்சி...
அதன் தியாகத்தலைவர்கள்...
மங்களசாமி.. RH.நாதன்.. கூத்தக்குடி சண்முகம்...
மு.கல்யாண சுந்தரம் மற்றும் தலைவர்கள்..

கேட்டவுடன் சும்மா கொடுப்பானா?  குத்தகைக்காரன்?

சிலுவை சுமந்த பங்குத்தந்தையை படகு சுமக்க..
துடுப்பு போடும் படகில் உடுக்கோடு பூசாரியும்...
அலை தாங்கும் படகில்.. ஆலிம்ஷாவும்..
ஈரக்கடலில் இறைவனை வேண்டி.. நடுக்கடலில்...
அர்ச்சனையோடு.. போதனையும்..
அல்லாவிடம் தொழுகையும்  நடத்தினார்கள்..

இந்த ஏமாற்று வித்தை எதிர்த்து..
கொதித்தனர்.. மீனவர்கள்...
மண்டபம் கடற்கரையில்..
தோழர்.மங்களசாமி.. RH.நாதன் தலைமையில்
மாபெரும் மறியல் போராட்டம்...
நூற்றுக்கணக்கானோர் கைது...
மதுரை மத்திய சிறையில் அடைப்பு...

மீனவர்களுக்கு புத்தி சொல்ல..
சாமியார்களும்.. பாதிரியார்களும்
சிறைக்கும் அழைத்து வரப்பட்டனர்...
தோழர்களால் சாமியார்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்...
காவல் துறை தடியடி...
ஏராளமானோர் மீது பொய் வழக்கு...
சிறையில் தோழர்.RH.நாதனை பாம்பு கடிப்பு...
என எத்தனையோ சோதனைகளுக்குப்பின்...
தோழர்களின் அயராத போராட்டத்திற்குப் பின்
மதுரை சிறைக்கதவு திறந்தது...

இராமநாதபுரம் ஆட்சியர் தலைமையில்..
மீனவர் சங்கத்தலைவர்கள்... குத்தகைக்காரர்கள்...
காவல் துறை... மீன்வளத்துறை அதிகாரிகள் என
முத்தரப்பு பேச்சு வார்த்தை... நடந்தது...
வார ஓய்வு உறுதியானது...
வாழ்வில்  ஓய்வென்பது உரிமையானது...
கடல் மீன்களின் கனவு நனவானது...

தோழர்களே...
உரிமை என்பது உதிரம் சிந்திப் பெற்றது...
ஒவ்வொரு காலத்திலும்.. 
ஒவ்வொரு பகுதியிலும்..
உரிமைக்கான போராட்டம் 
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...

வார ஓய்வு என்னும் வாழ்நாள் உரிமையை...
அர்ப்பணிப்போடு.. அயராது போராடி...
 நம் முன்னோர் பெற்ற அற்புத உரிமையை.. 
அற்பக்காரணங்கள் கூறி சில 
அற்பங்கள் பறிக்க முயலுவதைக் காணும் போது.. 
அடிமட்ட ஊழியரின் 
அடிவயிற்றில் அக்னி மூளாதா?
போராட்டக்கனல் பெரு நெருப்பாய் மாறாதா?

அதற்கான களமே... காலமே..
நவம்பர் - 24
நெஞ்சில் கனல் ஏந்தி..
கையில் தணல் ஏந்தி.. 
வாரீர்.. தோழர்களே...

No comments:

Post a Comment