தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday, 30 November 2015

Contract Labour  Weekly off Wage
MOL Gazettee dt 20-5-2009 SO 1285 E for BSNL
Minimum Rates of wages consist of
a. basic rates of wages
b. Variable DA
Wherein any area the minimum rates of wages fixed by this notification are lower than the minimum rates of State Govt, the rates fixed by the state Govt shall in respect of these areas be deemed to be the minimum rates of wages payable.
The minimum rates of wages include the wages  for weekly day of rest.

ND GOVT Notification of MW dt 26-7-11
Minimum rates of wages per month 6422( if you divide it by 30 days then it is 214 per day)
Minimum wage per day is 247 ( if you multiply by 30 then it becomes 7410)
but you divide 6422 by 247 then it becomes 26 days wage only
ND Govt says the minimum rates of wages are inclusive of wages for weekly off day and no separate payment would be necessary on this account
The present rate notified recently w.e.f oct 2015 is monthly 9178  daily rate 353 (353* 26= 9178)
Goa Notification 28th may 2015
(I)                (a) The minimum rates of wages as revised are all inclusive rates of wages including the wages for the weekly day of rest.
(II)             (b) The minimum daily wages payable to an employee employed in any category in respect of which monthly rate of minimum wages is revised shall be computed by dividing the minimum rates of monthly wages revised for the class of employees to which he/she belongs by 26, the quotient being stepped up to the nearest paise.

(III)            (c) The monthly rates of minimum wages payable to an employee employed in any category in respect of which daily rate of minimum wages is revised shall be computed by multiplying the daily rate by 26.

Monday, 23 November 2015

ஓரடி முன்னால்...

இன்று 23/11/2015 
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளின் கோரிக்கைகள் மீது   
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

பல்வேறு பிரச்சினைகளில் நிர்வாகம் 
சாதகமான நிலை எடுத்துள்ளதால் 
நமது 24/11/2015 உண்ணாவிரதப்போராட்டம் 
விலக்கிக்கொள்ளப்பட்டது. 

அடிமட்ட ஊழியர்களின் நியாயமான 
கோரிக்கைகள் தீர்விற்கு வழி வகுத்த 
அருமைத்தோழர்.ஆர்.கே., 
TMTCLU மாநிலச்செயலர் தோழர்.செல்வம்,
தமிழ் மாநிலச்சங்கம், 
தமிழ் மாநில நிர்வாகம் மற்றும் 
காரைக்குடி மாவட்ட   நிர்வாகத்திற்கு 
நமது நன்றிகள் பல...

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தீர்வில் 
தொடர்ந்து நம்மோடு இணைந்து செயல்பட்ட 
BSNLEU சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக...

பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 • பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது போல் மாதம் 26 நாட்கள் ஊதியம் நடைமுறைப்படுத்தப்படும்.
 • மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • 2016 பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
 • மாதந்தோறும் சம்பளப்பட்டியல் WAGE SLIP வழங்கப்படும்.
 • இந்த மாதம் ESI மருத்துவ அட்டை வழங்கப்படும். 
 • அடையாள அட்டை டிசம்பரில் வழங்கப்படும்.
 • வைப்புநிதி UAN  வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதி EPF WITHHELD AMOUNT  ஜனவரி 2016க்குள் ஊழியரின் கணக்கில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
 • மரணமுற்ற தோழர்.ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
 • நிரந்தர ஊழியர் இல்லாத இடங்களில் தனியாகப் பணி செய்யும் தோழர்களுக்கு எட்டு மணி நேரப்பணி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
 • தேசிய விடுமுறைக்கு சம்பளம் வழங்கப்படும்...


தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான 
சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு..
மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூடுதல் கூலி...
அவரவர் செய்யும் பணிக்கேற்ற சம்பளம்...
சிறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு...
கேபிள் பணி செய்யும் தோழர்களுக்கு கூடுதல் சம்பளம்...
காவல் பணி செய்வோருக்கு WATCH AND WARD சம்பளம்...
போன்ற கோரிக்கைகள் மீது எந்தவித முன்னேற்றமும் இல்லை..
இவை யாவும் தங்களது  நிர்வாகத்தின் 
அதிகார வரம்புக்குட்படாதவையாக  
மாவட்ட நிர்வாகம் கருதுகிறது..
ஆயினும் அடிப்படையான 
ஒரு சில பிரச்சினைகளில் தீர்வை எட்டியுள்ளதால் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் பின்னடைவை எட்டாமல்
ஓரடி முன்னேறியுள்ளது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.

தோழர்களே...
கைக்கெட்டிய  உரிமைகளுக்காக மகிழ்வு கொள்வோம்...
கைவராப்பலன்களுக்காக  கவலை கொள்ளோம்...
காலம் கனியும் போது களம் காண்போம்... 
ஒப்பந்த ஊழியர் நலம் காப்போம்...

Tuesday, 17 November 2015

வார ஓய்வும்.. வரலாற்று உண்மைகளும்..

உலகம் ஒரு சேர விழித்ததில்லை...
உலகம் ஒரு சேர உறங்கியதில்லை...
ஓயாத உலகில்...
ஓய்வின்றி  நடக்கும் ஒரே நிகழ்வு
ஓய்வு ஒன்றுதான்...

மதம் ஓய்வை  விதியாக்கியுள்ளது...
மனிதம் ஓய்வை உரிமையாக்கியுள்ளது...

அந்தோ... BSNLலில் மட்டும்..
உழைக்கும் தொழிலாளிக்கு ஓய்வளிப்பதில்
விதி விளையாடுகிறது...
சட்ட விதி சதிராடுகிறது...
கெட்ட சதி தலைவிரித்தாடுகிறது...

நினைவலைகள்...
இராமேஸ்வரம்  கடலலைகளை நோக்கிப் பயணிக்கிறது...
வெள்ளையர்களிடமிருந்து விடிவு பிறந்த காலம்..
ஆனாலும் கொள்ளையர்களிடமிருந்து...ஏது விடிவு காலம்?

அன்று...
இராமநாதபுரம் பகுதியில்..
தரை மேல் பிறந்து தண்ணீரில் பிழைத்த மீனவர்கள்
நாள் முழுக்க.. வாரம் முழுக்க.. மாதம் முழுக்க..
நடுக்கடலில் மீன் பிடித்து தண்ணீரில் மிதந்தார்கள்..
ஓய்வு என்பதே இல்லாமல் கண்ணீரில் மிதந்தார்கள்...

அன்று.. அவர்கள் கரம் உயர்த்தி
குத்தகைக்காரர்களிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்கள் ஞாயிறு சர்ச்சுக்கு செல்ல வேண்டும்...
முஸ்லிம்கள் வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு செல்ல வேண்டும்..
இந்துக்கள் செவ்வாயன்று தங்கள் குலசாமிகளைக் கும்பிட வேண்டும்...
எனவே.. குத்தகைக்காரனே..
எங்களுக்கு வார ஓய்வு கொடு...

கேட்டவர்கள் மீனவர்கள்...
கேட்க வைத்தது.. யார்?
நம் மீனவர் சங்கம்...
இந்தியப் பொதுவுடைமைக்கட்சி...
அதன் தியாகத்தலைவர்கள்...
மங்களசாமி.. RH.நாதன்.. கூத்தக்குடி சண்முகம்...
மு.கல்யாண சுந்தரம் மற்றும் தலைவர்கள்..

கேட்டவுடன் சும்மா கொடுப்பானா?  குத்தகைக்காரன்?

சிலுவை சுமந்த பங்குத்தந்தையை படகு சுமக்க..
துடுப்பு போடும் படகில் உடுக்கோடு பூசாரியும்...
அலை தாங்கும் படகில்.. ஆலிம்ஷாவும்..
ஈரக்கடலில் இறைவனை வேண்டி.. நடுக்கடலில்...
அர்ச்சனையோடு.. போதனையும்..
அல்லாவிடம் தொழுகையும்  நடத்தினார்கள்..

இந்த ஏமாற்று வித்தை எதிர்த்து..
கொதித்தனர்.. மீனவர்கள்...
மண்டபம் கடற்கரையில்..
தோழர்.மங்களசாமி.. RH.நாதன் தலைமையில்
மாபெரும் மறியல் போராட்டம்...
நூற்றுக்கணக்கானோர் கைது...
மதுரை மத்திய சிறையில் அடைப்பு...

மீனவர்களுக்கு புத்தி சொல்ல..
சாமியார்களும்.. பாதிரியார்களும்
சிறைக்கும் அழைத்து வரப்பட்டனர்...
தோழர்களால் சாமியார்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்...
காவல் துறை தடியடி...
ஏராளமானோர் மீது பொய் வழக்கு...
சிறையில் தோழர்.RH.நாதனை பாம்பு கடிப்பு...
என எத்தனையோ சோதனைகளுக்குப்பின்...
தோழர்களின் அயராத போராட்டத்திற்குப் பின்
மதுரை சிறைக்கதவு திறந்தது...

இராமநாதபுரம் ஆட்சியர் தலைமையில்..
மீனவர் சங்கத்தலைவர்கள்... குத்தகைக்காரர்கள்...
காவல் துறை... மீன்வளத்துறை அதிகாரிகள் என
முத்தரப்பு பேச்சு வார்த்தை... நடந்தது...
வார ஓய்வு உறுதியானது...
வாழ்வில்  ஓய்வென்பது உரிமையானது...
கடல் மீன்களின் கனவு நனவானது...

தோழர்களே...
உரிமை என்பது உதிரம் சிந்திப் பெற்றது...
ஒவ்வொரு காலத்திலும்.. 
ஒவ்வொரு பகுதியிலும்..
உரிமைக்கான போராட்டம் 
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...

வார ஓய்வு என்னும் வாழ்நாள் உரிமையை...
அர்ப்பணிப்போடு.. அயராது போராடி...
 நம் முன்னோர் பெற்ற அற்புத உரிமையை.. 
அற்பக்காரணங்கள் கூறி சில 
அற்பங்கள் பறிக்க முயலுவதைக் காணும் போது.. 
அடிமட்ட ஊழியரின் 
அடிவயிற்றில் அக்னி மூளாதா?
போராட்டக்கனல் பெரு நெருப்பாய் மாறாதா?

அதற்கான களமே... காலமே..
நவம்பர் - 24
நெஞ்சில் கனல் ஏந்தி..
கையில் தணல் ஏந்தி.. 
வாரீர்.. தோழர்களே...

Sunday, 15 November 2015

ஒப்பந்த ஊழியர் உரிமை மீட்புப்போராட்டம்

AITUC 
அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ்

NFTE 
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் 

TMTCLU 
தமிழகத் தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 

இணைந்த 

ஒப்பந்த ஊழியர்  

உரிமை மீட்புப் போராட்டம் 

24/11/2015 - செவ்வாய் - காலை 10 மணி 
BSNL  பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

ங்கேற்பு...

TMTCLU 
தோழர்.ஆர்.கே.,
 மாநிலத்தலைவர் 

தோழர்.செல்வம் 
மாநிலச்செயலர் 

தோழர்.குடந்தை விஜய் 
மாநிலப்பொருளர் 

AITUC 
தோழர்.குணசேகரன் - MLA 
சட்டமன்ற உறுப்பினர் 

தோழர்.பழ.இராமச்சந்திரன் 
மாநிலக்குழு உறுப்பினர் 

தோழர்.கார்வண்ணன் 
மாவட்டச்செயலர் 

NFTE
தோழர்.சேது 
சிறப்பு அழைப்பாளர்

தோழர்.இலட்சம் 
மாநிலத்தலைவர் 

தோழர்.சென்னக்கேசவன் 
மாநிலச்செயலர் - பொறுப்பு 

மற்றும் முன்னணித்தோழர்கள்... 

ஆண்டுக்கணக்கில்... அல்லல்படும்... அவதிப்படும்... 
ஒப்பந்த ஊழியரின் துயர் தீர்க்க...
தோழர்களே.. உரம் கொண்ட நெஞ்சினாய்..
உறுதி கொண்டு வாரீர்....வாரீர்...

தோழமையுடன்  அழைக்கும்...
வெ .மாரி                                                     சி.முருகன் 
NFTE மாவட்டச்செயலர்                        TMTCLU மாவட்டச்செயலர்
    தீபாவளி வலமும்... 

தீராத அவலமும்...

                                  தீபாவளி அன்று தோழர்களை, நண்பர்களை, உறவுகளைச் சந்திப்பது என்பது மிகவும் மகிழ்வு தருவதாகும். அன்று அதிகாலை பெட்ரோல் பங்கில்  பணி புரியும் தோழர்.சுப்பையாவை சந்தித்தோம். போனஸ் வாங்கியாகிவிட்டதா? என்று கேட்ட போது..  "ஆமாம் தோழர். நேற்றுத்தான் 6000 ரூபாய் கொடுத்தார்கள்.. இது INDIAN OIL நடத்தும் பெட்ரோல் பங்க். எனவே ஒரு மாத சம்பளமான 5500 உடன் இனிப்புக்கு 500 சேர்த்து 6000 போனசாக கொடுத்தார்கள்" என்றார்.  பெட்ரோலை விட வேகமாக மகிழ்ச்சி மனதில் பற்றியது.  அதன் பின் டீக்கடைப்பக்கம்  சென்றோம்.

டீக்கடையில் வேலை செய்யும் தோழர்.காளியப்பன்  3000 ரூபாய் போனசும், 1 கிலோ இனிப்பும் கிடைத்ததாக சொன்னார். செய்தியும் இனித்தது.. டீயும் இனித்தது.

மளிகைக்கடையில் பணிபுரியும் தோழர்.இராமுவை  பேருந்து நிலையம் அருகில்  சந்தித்தோம். 3500 போனசோடு புதுத்துணியும் பெற்றுக்கொண்டு ஊருக்கு செல்வதாகக் கூறினார். மளிகை மல்லிகையாய் மணத்தது.  

அந்தவாக்கிலேயே.. சினிமாக்கொட்டகையில் பணி புரியும் தோழர்களை பார்க்க நேரிட்டது. ஒரு மாத சம்பளத்தை அதாவது 5000 போனசாகக் கிடைத்ததாக மகிழ்ந்தார்கள். நல்ல சினிமா பார்த்த மாதிரி இருந்தது.

நகராட்சியில் பணி புரியும் துப்புரவுத்தொழிலாளர்களை சந்தித்து கைகுலுக்கினோம். போனஸ் என்னாச்சு? என்றபோது.. குத்தகைக்காரனுக்கு கமிசன் கட்டுபடியாகவில்லையாம்.. ஆனாலும் ஆளுக்கு 3000 முன்பணம் தந்து விட்டதாகவும்.. அதை மாதாமாதம் 500 வீதம் பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறினார்கள்.  நகராட்சி என்றாலே குப்பைதான்.. இருந்தாலும் பரவாயில்லை.. குப்பையிலும் குண்டுமணி...

நகராட்சிக்கு எதிரேதான் நமது அலுவலகமாயிற்றே..  செல்லும் வழியிலேயே காலணி சீர் செய்யும் தோழர்.முத்தப்பனைப்  பார்த்தோம். வாழ்த்து சொல்லி விட்டு  100 ரூபாயை  அன்பின் அடையாளமாய் கொடுத்தோம். வேண்டாம் என்று மறுத்தார். பாக்கெட்டில் வைத்து விட்டு பறந்து சென்றோம் நமது அலுவலகத்திற்கு. 

நமது அலுவலகத்திலே கருத்த உருவமும்.. கசங்கிய உடையுமாய் நமது ஒப்பந்த ஊழியர் நின்றிருந்தார். மத்தாப்பாய் மனசுக்குள் இவ்வளவு நேரம் பொங்கிய மகிழ்ச்சி... அவரைப் பார்த்ததும் புஸ்வாணமாய் போய் விட்டது. 

நமக்கே தெரியும் எந்த குத்தகைக்காரனும் ஒப்பந்த ஊழியருக்காக ஒத்தைப்பைசா கூட இந்த ஆண்டு போனசாக தரவில்லை என்பது.  "என்ன தோழர் குத்தகைக்காரன்தான் போனஸ் தரவில்லை... உங்களிடம் வேலை வாங்குபவர்களாவது ஏதேனும் கொடுத்தார்களா? என்று கேட்டோம். "சார்.. நாயாக நாங்கள் இங்கே வேலை பார்க்கிறோம்.. ஆனால் நாய்க்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இங்கில்லை" என்று வேதனையுடன் சொன்னார்.

மேலும்.." போனஸ் தான் கொடுக்கவில்லை...இந்த மாதம் சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள்.. சார்.. காந்தி பிறந்த நாளுக்கு கூட சம்பளம் தரவில்லை. இந்த மாதம் உயர்ந்துள்ள DA கூடப்போடவில்லை.  இருபது நாள் சம்பளம்தான் தந்துள்ளார்கள். ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் எங்களிடம் எதுவும் கேட்காதே.. கணக்கு அதிகாரிகளைப் போய்க்கேள்.. அவர்கள் என்ன சொல்கிறார்களோ... அதைத்தான் நாங்கள் போட முடியும். இல்லையென்றால் எங்கள் பில்லை சுழித்து விடுவார்கள்" என்று சலிப்புடன் கூறுகிறார். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை".. என்று கண் கலங்கினார்.

"ஆத்திரமும்..ஆங்காரமும் அணுகுண்டாய் நம் மனசுக்குள் வெடித்தது. " 
"கவலைப்படாதீர்கள்..காலம் இப்படியே போகாது.. நிச்சயம் மாறும்.. மாற்றுவோம்"  என்று சொல்லி விட்டு இருநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு.. கறி வாங்க மறந்து விட்டு.. கனத்த மனதுடன்  வீடு சென்றோம்.

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கச்சொல்லி...
அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி தரச்சொல்லி...
EPF...ESI.. நலத்திட்டங்களை அமுல்படுத்தச்சொல்லி...  
துணைப்பொதுமேலாளர் நிர்வாகத்தைப் பலப்பல முறை 
BSNLEU மற்றும் NFTE   மாவட்டச்செயலர்கள் 
கூட்டாகச்  சென்று விவாதித்தோம்... தோம்..தோம்..

காளை மாட்டில் பால் கறக்கவும்...
கல்லில் நார் உரிக்கவும்....
எங்களால் முடியவில்லை...

இம்முறை கணக்கு அதிகாரிகளிடம் விவாதிக்க மனமில்லை...
காரணம்.. அவர்கள் கணக்குப் போட்டு... கணக்காய்ப் போட்டு.. 
காரியத்தைக் கச்சிதமாக திசைதிருப்பிக் கவிழ்த்து   விடுவார்கள்...

வேறு என்னதான் செய்வது?
கண்ணிருந்தும்.. கொடுமையைக் கண்டிருந்தும்..
உயர்த்தக்கரம் இருந்தும்... உரிமை கேட்க  குரல் இருந்தும்.. 
நாம் வாளா இருப்போமா?
சட்டங்களும்.. விதிகளும் 
உழைப்பாளிகளுக்கு சாதகமாக இருந்தும்.. 
அதை சட்டை செய்யாமல் இருப்பதுதான் நிர்வாகமா?
ஒப்பந்த ஊழியர்கள் ..
ஆகப்பெரும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தாலும்..
அன்றாட வாழ்வுக்கே அல்லல்பட்டு... துன்பப்பட வேண்டுமா?
அதிகாரிகளின் அலட்சியத்தால்... அவர்கள் வாழ்வு அழியவேண்டுமா

இல்லை... தோழர்களே.. இல்லை...
மாபெரும் தலைவர்கள் உயர்த்திப்பிடித்த 
செங்கொடியோடு.. இதோ.. போர்க்கொடியையும்..
இன்று நாம்  உயர்த்தி விட்டோம்..

விழியற்றவர்களுக்கு... ஒளியேற்றிய...
NFTE சம்மேளன தினத்தன்று 
24/11/2015..  காரைக்குடியில்...
அருமைத்தோழர்.
ஆர்.கே.,
அவர்கள் தலைமையில் 
உறிஞ்சப்படும் தொழிலாளரின்
 உரிமை மீட்பு உண்ணாவிரதம்...

அடிமட்ட ஊழியரின்.. இன்னல் களைந்திட..
அண்ணல் வழியில்.. அறவழியில்.. போராடுவோம்...
கோப வெள்ளமாய்ப் பொங்கி வாரீர்.. தோழர்களே...

Sunday, 8 November 2015


BSNL உயர்த்திடும் - காத்திடும்
போராட்ட தீபம் மிளிர !
நிரந்தர ஊழியரின் போனஸ் பெற்றே தீரவேண்டும் எனும்
 கோப தீபம் நெஞ்சில் உயர !
ஒப்பந்த ஊழியரின் போனஸ் அநீதி அடியோடு அகற்றும்  நியாய தீபம் ... சுமந்த
தீபாவளி வாழ்த்துக்கள் !

Friday, 6 November 2015


1917ல் ரஷ்யாவில், ஒரிஜினல் புரட்சித் தலைவர் தோழர் லெனின் தலைமையில் ஆஹாவென்று எழுந்த யுகப்புரட்சி, உலக வரலாற்றையே புரட்டிப் போட்டது. காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப் பட்டுக் கிடந்தநாடுகளுக்கு 'விடுதலை சாத்தியமே' என்ற நம்பிக்கையை ஊட்டியது. 14 மணி நேரம் உழைத்தபின், கொடுத்த கூலியை வாய் மூடி வாங்கிச் செல்வதுதான் தொழிலாளியின் கடமை என்பதை மாற்றி, 8மணி நேர வேலை, மருத்துவம், கல்வி, வீடு, உடை, உணவு அனைத்தையும் அடிப்படை உரிமையாக்கியது. உலகெங்கும் தொழிற் சங்கங்களுக்கு விதை போட்டது.சோவியத் ஆட்சி வீழ்ந்து இருக்கலாம். ஆனால் அது உருவாக்கிய மாற்றங்கள் மறையாதவை. இந்த நவம்பர் 7ல், அதன் 98ம் ஆண்டு பிறக்கிறது. புரட்சி நீடு வாழ்க!
அனைவருக்கும் புரட்சி தின வாழ்த்துகள்.

Wednesday, 4 November 2015

ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம் 4-11-2015

அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் போனஸ் வழங்கக்கோரி மாவட்டம் முழுவதும் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனடிப்படையில் இன்று நிர்வாக தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. NFTE சார்பில் மாவட்ட உதவிசெயலர் தோழர்.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முத்துவேல், BSNLEU மாவட்ட செயலர் தோழர் சம்பந்தம், மாநில துணைத்தலைவர் தோழர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில்,
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி காண்ட்ராக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து ஒப்பந்த ஊழியரும் போனஸ்  பெற நிர்வாகமும் உத்தரவாதம் வழங்கியுள்ளது.  
நாமும் நிர்வாகத்திடம்  குறிப்பிட்ட தேதிக்குள் போனஸ் வழங்கப்படவில்லையெனில் திட்டமிட்டபடி 6- ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென தெளிவுபடுத்தியுள்ளோம்.  
கடலூரில் இதனை விளக்கி விளக்ககூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இரு சங்க மாநில,மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் தோழர்கள், மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதைப்போன்று மாவட்டம் முழுமையும் உள்ள கிளைகள் தோறும் கூட்டு ஆர்ப்பாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Tuesday, 3 November 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ்-சம்பளம்


 தோழர்களுக்கு வணக்கம்!
     நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் VDA (Variable Dearness Allowance) வை இணைத்து தரவேண்டுமென கார்பரேட் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்டையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆகவே மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என கவனிக்கவும்.

      மேலும் இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் விரைவில் வழங்கப்பட வேண்டுமெனவும்  நிர்வாகத்தால் அந்த அந்த ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சில பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மற்ற பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. ஆகவே விரைவில் அனைவருக்கும் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தங்களது  மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தும்படி கேட்டுகொள்கிறேன்.
தோழமையுடன்
R.செல்வம்


மாநிலப்பொதுச்செயலர்-TMTCLU