தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 17 March 2015

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர விவகாரம்: என்எல்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்




நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மீது என்எல்சி நிர்வாகம் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக  "என்எல்சி இண்டோசர்வ் தொழிலாளர் ஊழியர்  சங்கம்' சார்பில் அதன் தலைவர் கே. பரமசிவம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. ஆனந்த செல்வம் ஆஜராகி, "ஒப்பந்தப் பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை என்எல்சி நிர்வாகம் தற்போதுவரை அமல்படுத்த மறுக்கிறது. எனவே, என்எல்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 இதைகேட்ட நீதிபதிகள், "இது தொடர்பாக என்எல்சி தலைவர் பி. சுரேந்திர மோகன் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
பின்னணி: என்எல்சி-இல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் சங்கத்தினர் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் சேர்ந்த தினத்தை அடிப்படையாக வைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 2008-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அதே ஆண்டில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் என்எல்சி-இல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பெயர் பட்டியலை அவர்கள் பணியில் சேர்ந்த தினத்தை குறிப்பிட்டு பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் வெளியிட வேண்டும் என 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி 10,372 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2013, ஏப்ரல் 13-ஆம் தேதி உறுதி செய்தது.

No comments:

Post a Comment