தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday, 13 January 2017

நிஜ நாடகம்

உண்மையில் ஒரு நிஜம்நாடகமானது

          இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ்இயல் என்பது இயல்பான பேச்சு, எழுத்து; இசை ராகத்தோடு இனிமையாகப் பாடப்படுவது அல்லதுகருவிகளில் இசைக்கப்படுவது; நாடகம் என்பதோபேச்சு நடை உரையாடலையும் சில போழ்து, பாட்டுநாட்டிய அபிநயங்கள்  எல்லாம் இணைந்துமக்களை வெகுவாகக் கவரக்கூடிய கலை வடிவம்.

          நாடகத்தின் செய்தி மக்களின் மனதில்ஆழமாகப் பதியும். அதன் வீச்சுக்கு உதாரணம் ஒரு அரிச்சந்திரா நாடகம் அல்லது கூத்தைப் பார்த்த பிறகுசாதாரண மோகன் தாஸ் கரம் சந்த் இன்று வரை உலகம் அதிசயத்துப் பார்த்து வியக்கும் மகாத்மா காந்திஆனது.

          தேர்ந்த ஒப்பனைகள், காட்சி சிலைகள், உணர்ச்சி மிக்க வசனம் இவற்றோடு காண்பவர்களின்கண் எதிரே நடித்துக் காட்டப்படுவது அதன் இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த வடிவமே நவீனசினிமா ஆனால் சினிமா பார்க்க நாம் தியேட்டருக்குச் செல்ல வேண்டும் செலவும் அதிகம்.

          அதனால்தான் நாம் இருக்கும் இடத்திலேயே  மக்கள் கூடும் தெருக்களிலே குறைந்தஒப்பனைகளோடு அல்லது ஒப்பனை ஏதுமின்றி நடித்துக் காட்டப்படுவதுதான் நிஜ நாடகம் / தெருநாடகம். பலமணி நேரம் விவாதித்து, பேசி, பிரசங்கம் செய்து புரிய வைக்க வேண்டிய விஷயம் ஒரு சிறுகாட்சி அமைப்பில் நடித்துக் காட்டப்படும் போது மிகத் தெளிவாக விளங்கும், மனதில் படியும்.

          அத்தகைய ஒரு சிறப்பான முயற்சிதான் குடந்தைத் தோழர்கள் நமது கருத்தரங்கில் நடத்திய நிஜநாடகம்—“ நியூ டெல்லி சலூன்.”  முதலில் நாடகத்தின் மையக் கரு என்ன என்பதைப் பார்ப்போம்

நாடகக் கதைக் களம்

        நம் நாட்டில் படிக்காதவர்களின் எண்ணிக்கை இன்னும் கணிசமாக உள்ளது ஆனால்அவர்கள் நாட்டு நடப்பு தெரியாதவர்கள் அல்லர். அந்த நடைமுறை ஞானம் அவர்களுக்குஎப்படிக் கிடைத்தது?   அது வெளிப்படும் இடம் மக்கள் கூடும் டீ கடை, காத்திருந்துமுடிவெட்டிக்கொள்ள நேரும் சலூன் எனும் முடி திருத்து நிலையங்கள்

        நம்முடைய நிஜ நாடகத்தின் களம் ஒரு சலூன் ஒரு வகையில் ஹை டெக் சலூன் முடிதிருத்தும் கலைஞர் ஏப்ரன் எனும் மேலங்கி அணிந்த ஒரு இளைஞர் கடையின் பெயர் நியூடெல்லி சலூன்’. அநேகமாக கடை ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும். கண்ணாடிக்கதவைத் திறந்து கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். நாடகம் துவங்குகிறது.

        சலூனுக்கு வந்தவர் கடையின் வாடிக்கையாளரான ஒரு BSNL அதிகாரி நம்கண்களும்அவரோடு உள்ளே நுழைகிறது சலூனில் அந்தக் கடைக்கே உரிய சுழலும் நாற்காலி. ஆனால்வித்தியாசமாக பல தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன காரல் மார்க்ஸ், பெரியார்,லெனின், அண்ணல் அம்பேத்கர் மற்றும் தோழர் ஜீவா.

        அதுவே காணும் நம்மை சற்று நிமிர்ந்து உட்காரச் செய்கிறது பார்வையாளர்களின்கவனத்தை மேலும் கவரும் வகையில் எடுப்பான குரலில் ஒரு நாட்டுப் பாடல் கடந்த 50நாட்களுக்கும் மேல் மக்கள் படும் பாட்டை  வங்கிகளில், ஏடிஎம் க்கு முன்னால் வரிசையில் 500 / 1000 / புதிய 2000 நோட்டுகளால் படும் அவதியை பாட்டு விவரித்து நாடகக் கருவின்பின்புலத்தை இசையால் நிறைக்கிறது.

 நாடகம்



       வாடிக்கையாளரான BSNL அதிகாரி சுழல்நாற்காலியில் வந்து அமர, கடை ஊழியர்பரபரப்பாகிறார் கருவிகளை சரியாக எடுத்துவைக்கிறார். உரையாடல் ஆரம்பிக்கிறது.

        அதிகாரி, பிரதமர் மோடியின் நவம்பர் 8செல்லாத நோட்டு நடவடிக்கையைப் பாராட்டிஇந்தியா எப்படி மாறப்போகிறது பாருங்கள்என நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளின்பிரதிநிதியாகப் பேசுகிறார் முடிவெட்டும்தொழில் நுட்பக் கலைஞரான இணைஞர்அவரிடம் நாட்டு நடப்பை எதார்த்தமாக நக்கல்நையாண்டியுடன் புட்டு புட்டு வைக்கிறார்.

        வாட்ஸ் அப், முகநூல்களில் படாதபாடுபடும் பண மதிப்பிழக்கப்பட்ட நடவடிக்கைநகைச்சுவைகள் குடந்தைத் தோழர்கள் மூலம் நேரில் கேட்டபோது அரங்கில் எழுந்தகைதட்டல்கள்…..  அப்பப்பா….. அற்புதம் ….அனாயாசம்.

        மோடி அரசின் மக்கள் விரோத, தேச பக்தி முகமூடி அணிந்த, கார்பரேட்டுகளின்நலன்களை மட்டுமே தாங்கிப் பிடிப்பதான  டி-மானிடைசேஷன் குளறுபடிகளை பேச்சாளர்கள்எவ்வளவுதான் புள்ளி விபரங்களோடு விளக்கினாலும், அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்எழுந்த அரசியல் கட்சிப் பேச்சு என ஒதுக்கிவிடக் கூடும் சாதாரண மனிதனின் குரலாகஒலிக்கும் போது நெஞ்சில் தைக்கிறது, உண்மை புரிகிறது.

        “BSNL நிறுவனத்தின் அதிகாரி நீங்க உங்க பையன், பொண்ணு, மருமக, வூட்டுகாரஅம்மா எல்லோரும் ஒவ்வொரு பேங்கில அப்படின்னு சொல்றீங்க….. வாழ்க்கையில நல்லாசெட்டிலாயிட்டீங்க சார்“ – இது முடிவெட்டும் இளைஞர்

        மோடியை முதலில் புகழ்ந்த அதிகாரி சொல்கிறார்  நீங்க வேற. . . கடுப்பேத்தாதீங்கதம்பி அவங்க ஒவ்வொத்தரும் ஒவ்வொரு பேங்க் ஏடிஎம் வரிசையில நீக்குறாங்க

        கை தட்டலுக்குக் கேட்க வேண்டுமா?

        இடையே செல்பேசி ஒலிக்கிறது கடைக்காரர் தன் மனைவியிடம் அக்கறையாகப்பேசுசிறார்.  “ தண்ணி பாட்டில் எடுத்துகிட்டியா? பிளாஸ்கில டீ, பிஸ்கெட் பாக்கெட் டிபனு,குடை எல்லாம் எடுத்துகிட்டியா?... ஏன் தம்பி,             வொய்ஃப்   வெளியூர்   போறாங்களா?“   பாராட்டும்          குரலில் அதிகாரி

        “ ஏடிஎம் வரிசையில நிக்கப் போறா சார். எப்போ வருவாளோ? என்னைக்குத்  திரும்புவாளோ?“ அலுப்பாக இளைஞர்.

        அரங்கம் அதிர்ந்தது கைதட்டில்.

        பேச்சின் இடையே அதிகாரி தனது நிறுவனத்தின் நல்ல அம்பாசிட்டராக செயல்படுவதைமறக்கவில்லை அவர் சொன்னார்

        “  தம்பி! நான் ரொம்பப் பெருமைப்படறேன் தம்பி, BSNL நிறுவனத்திலே வேலைபார்க்குறேன்கிறத்துல உங்க ஊர் தானே புயலின் போது, சென்னை மழை வெள்ளத்திலேதொலைபேசி சேவைய நிறுத்தாம கொடுத்தது எங்க நிறுவனம் மட்டும்தான் தம்பி

        எடக்கு மடக்கா இளைஞர் ஒரு கேள்விய தூக்கிப் போட்டார் : “ உங்க BSNL விளம்பரத்துலபிரதமர் மோடிய காணோம் ஆனா தனியார் கம்பெனி JIO விளம்பரத்தில வெறும் 500 ரூபாய்க்குமாடலா இருந்தார்ல, ஏன் சார்?“

        அதிகாரி ஏன் அங்கே நிற்குறார், ஆபிசுக்கு லேட்டாயிடுச்சு அப்படின்னு முடிவெட்டிக்காமலேயே போய்ட்டார்.

        பாவம். நம்ப கடைக்காரர்இன்னும் காத்திருக்கிறார்.  2000 ரூபாய் ஏடிஎம் கிடைச்சு. . . அதுக்கு சில்லரையும் கிடைச்சு . . . யாரு கடைக்கு வரப் போகிறார் என்று.

பாராட்டுகள்

        நமக்கு மகிழ்ச்சி, நல்லதொரு நிஜ நாடகத்தை நமது ஊரில் நமது கருத்தரங்கில்அரங்கேற்றினோம் என்று.

        கருத்தரங்கில் பேச்சாளர்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்தி கருத்து விலகல் இல்லாமல்பேசினார்கள் ஆனால், இந்தப் பிரச்சனைகளை எல்லாம்பாதிக்கக் கூடிய அடிப்படையான அரசியலை, கலை உணர்வோடு குறைந்த நேரத்தில்நிகழ்த்தப்பட்ட நாடகம் புரிய வைத்தது.

        தோழர் கே. சுப்புராயன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) பாராட்டியதை விட நாம்என்ன பாராட்ட எடுத்த எடுப்பில் ஏஐடியுசி மாநிலத் தலைவர்  சொன்னார் : ‘சற்று    முன்  ஒப்பனை    இல்லாமல் நடித்தவர்கள்,இன்று ஆட்சியில்/அரசியலில்   ஒப்பனையோடு   நடிப்பதைத்     தோலுரித்துக் காட்டினார்கள்

        சென்னையில் நமது சங்க மாநாட்டில் தோழர் குப்தா குறிப்பிட்டதுதான் நினைவுக்குவருகிறது சமூக ஒற்றுமையை வலியுறுத்தி குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடந்த பிறகு தோழர்குப்தா கூறினார் : “ குழந்தைகள் நம்மைவிட அதிகம் அறிந்திருக்கிறார்கள் (The children knew better than us.)



        வாழ்த்துகள் தோழர்களே! உங்கள் கலைப் பணி தொடரட்டும் !
கடலூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்
தோழர் என்.கே. சீனுவாசன்
 (TMTCLU சங்கத்தின் சட்ட ஆலோசகர்) அவர்களின் உரை:


(தோழர் என்கேஎஸ்.  கடலூர் NFPTE  சங்கத்தின் E – 3  மாவட்டச் செயலராக பல ஆண்டுகள் தோழர்கள் ரகு, ரங்கநாதன், முதலிய தலைவர்களோடு பணியாற்றியவர். பணிக் காலத்தில் இலாக்கா தேர்வுகள் எழுத தோழர்களுக்கு பாடம் நடத்தி அவர்களைப் பதவி உயர்வு பெற உதவியவர்.  ஓய்வு பெற்ற பின் வழக்கறிஞருக்கானக் கல்வித் தகுதி பெற்று இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக மட்டுமல்லாது நமது சங்கத்தின் சட்ட ஆலோசகராக ஒப்பந்த ஊழியர்களுக்குத் தொண்டாற்றி வருகின்றார். ) அவர் தமது வாழ்த்துரையில் :
          “பொதுச் செயலாளர் செல்வத்தோடு இணைந்து பல முயற்சிகள் எடுத்து வருகின்றேன்.  நிச்சயம் இந்த ஆண்டு அந்த முயற்சிகள் வெற்றியை ஈட்டித்தரும் / பலன்களைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்.
ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் சட்ட விதிகள், உத்தரவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.  சாதாரண ஆங்கிலம் வேறு, கோர்ட்டுகளின் ஆங்கிலம் வேறு.  ஒரு கமா, காற்புள்ளி சட்ட வியாக்யானத்தை நேர் எதிரிடையாகக் காட்டும்.  உதாரணத்திற்கு, உங்களுடைய ஓய்வுநாள் ஊதியம்.  ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் ஒருநாள் ஓய்வு நாள் ஊதியம் என்று இருப்பதைத் தவறாக விளக்கம் தந்து இன்று 26 நாட்கள் தான் சம்பளம். அந்த 26 நாட்களிலேயே ஞாயிறு ஓய்வு தினத்திற்கான ஊதியம் அடங்கியிருக்கிறது என்கிறார்கள்.  அந்த வரியில் ஒரு கமாவைப் போட்டு படித்தால் சரியாகிவிடும்.  ரெகுலர் ஊழியர்களுக்கு மாதச்சம்பளம். அங்கே ஓய்வு தினங்களுக்கான தனியான சம்பளம் இல்லை. 30 / 31 நாட்கள் சம்பளத்திலேயே அது அடங்கி விடும் என்பது அவர்களுக்கு சரியானது.  ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத சம்பளம் இல்லை.  எனவே ஓய்வு நாட்களுக்கான சம்பளம் தனியே வழங்கப்பட வேண்டும். இது பற்றி DLC உடன் நாம் பிரச்சனை எழுப்பி உள்ளோம்.  தொழிற் தகராறு சட்டப்படி சுமுக முடிவு ஏற்படவில்லை என்றால் உயர்நீதி மன்றத்தில் ஆர்டிகல்  படி நாம் வழக்குத் தொடர முடியும். 
          BSNLல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் மற்ற துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.  மற்ற இடங்களில் பணி தொடர்ச்சி இல்லை. ஆனால் BSNL ல் தொடர்ச்சியான பணி இருக்கிறது.  ஒரு வகையில் இங்கு ஒப்பந்த ஊழியர் கான்டிராக்ட் முறையே பொருந்தாது.  இங்கு கான்டிராக்டர்தான் மாறுகிறாரே தவிர பணி செய்யும் ஊழியர்கள் மாறுவதில்லை.  இவர்கள் நிரந்தரமாகும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உமாதேவி வழக்கில் வழங்கிய தீர்ப்பு (தொடர்ச்சியாகப் பணிசெய்யும் நமது ஒப்பந்த ஊழியர்கள் விஷயத்தில்) குறுக்கே இடைஞ்சலாக இராது என்பது எனது கருத்து.  அந்தத் தீர்ப்பு என்எல்சிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் பொருந்தாது எனில், நமக்கு மட்டும் எப்படி பொருந்தும்?
          அதே போல  A / B / C என ஊதியத்தை வேறுபடுத்தியதே தவறு.  இங்கே ஒப்பந்த ஊழியர் செய்யும் அதே பணியைத்தான் அங்கேயும் செய்கிறார்கள்.
          தோழர் சுப்புராயன் அவர்கள் கூறியது போல நமது ஒற்றுமையே நமது துயர் ஓட்டும்.  மேலும் தோழர்களே, EPF தொகையைத் திரும்ப எடுக்காதீர்கள்.  இடைத் தரகர்களிடம் ஏமாறாதீர்கள்.  அமைப்பை பலப்படுத்துங்கள்.  சந்தாவை முறைப்படுத்துங்கள்.  சங்கப் பத்திரிகைகளைப் படியுங்கள்.  நன்றி வணக்கம்.
(கருத்தரங்கம் முடிந்து ஒப்பந்த ஊழியர்களோடு தனியே உரையாடினார்.)
          அதன் பின்னர் நிஜ நாடகத்தில் நடித்த குடந்தைத் தோழர்களுக்கு தோழர் கே, சுப்புராயன்      கைத்தறி ஆடை அணிவித்துப் பாராட்டினார்.


தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு கடலூர் TMTCLU கிளைச் செயலாளர் தோழர் R.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுபெற்றது.  நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றது.